வியாழன், 13 ஜனவரி, 2011

ஒரு வேப்பமரத்தின் வேதனை.


எனக்கு உங்களை போல் சுற்றி வளைத்து பேசவோ, சூட்சுமம் வைத்து பேசவோ முடியவில்லை. நேரடியாக வெந்நீர்பட்ட கொப்பளமாய் வெடிக்கிறேன்.

ஒரு காலத்தில் யாரும், இரவு நேரத்தில் வரப்பயந்த, பேய் வீடு என்று செல்லப்பெயர் கொண்டு நீங்கள் என்னை வதைத்த, அந்த, அதே வேப்பமரம் நான் தான். கொஞ்சநாளாய் மனசு சரியில்லை. நிறைய சொல்ல நினைக்கிறன். உயிருள்ள மட்டும் உங்களுடன் நான் உள்ளவை உள்ளபடியே..

ஏதோ ஒரு பறவை போட்ட எச்சத்தில் விழுந்த விதையாகத்தான் நான் இருக்க வேண்டும். ஏனெனில் என் அருகில் அம்மாவோ, அப்பாவோ இருக்கவில்லை நான் அறிந்தவரை. ஆண்டவன் புண்ணியத்தில் அடிக்கடி பெய்த மழையாலும், அற்புதமான மனிதர்களாலும் ஆள் ஆனேன். ஒவ்வொரு நிலவிலும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான வித்தை காட்டி உணவூட்டும் அன்புத்தாய்மார், என் பூ பூமி தொடுமுன்பே கையேந்தி கைப்பற்றும் கன்னியர்கள், உழைத்து களைத்து வந்து காலாற களைப்புத்தீர்க்கும் காளைகள், மாலைவேளை மாய்ந்து போன கதைகளுக்கு உயிரூட்டி உசுப்பேற்றும் வயோதிபர்கள். தினம் இவர்கள் வாழ்வில் என் வளர்ச்சி வசந்தமாயிருந்தது.

திடீர் திருப்பம், காகம் கரைய மறுத்த கலிகாலத்தின் மற்றுமொரு கரிகாலம் அது. கொஞ்ச நாளாக அந்த பழைய மனிதர்களை காணவில்லை. என்ன ஆனதோ புரியவுமில்லை.

சில நாள் நிசப்தத்தின் பின் மனிதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் பழையவர்கள் அல்லர். கைகளில் கனரக ஆயுதங்கள், கண்களில் கருணை சற்றுமில்லை. அடிக்கடி யாரையோ பிடித்து வருவார்கள். என்னில் கட்டி வைப்பார்கள். என் விரல் ஒடித்து அவன் விரல் ஒடியும் வரை, விடியும் வரை அடிப்பார்கள். வீறிட்டு அவன் அழுத அழுகையில், அவன் அந்நியன் என்று மட்டும் புரிந்தது. பீறிட்டு பாய்ந்த இரத்தம் கண்டு, என் காள்கள் கூட கண்ணீர் வடித்ததுண்டு. இவர்கள் காதுகளில் காளான்களும், கண்களில் கறையான்களும் களியாட்டம் நடத்துகின்றனவோ? யாமறியோம், புலன் இருந்தும் புழுக்களாக இவர்கள்...

நான்கு நாட்களில் அவன் நாதியற்றுப்போவான். அதுவே அவனின் கடைசித்தேதி. கழுத்தில் கயிறு கட்டி என் கரங்களில் கட்டித் தூக்குவார்கள். கழுகுகள் கண்கள் கொத்த, நாய்கள் அண்ணாந்து ஆவென்று ஊளையிடும்.

என் தலைகள் வெள்ளையடிக்கப்படும் - எச்சங்களால், என் செவிப்பறைகள் கிழிக்கப்படும் - ஓலங்களால், தலை குனிந்து நிலை குலைந்து காத்திருப்பேன் மற்றுமொரு மழைக்கால குளியலுக்காய்.

நாட்கள் பல நகர்ந்தும் நாடகம் முடிவதாக இல்லை. அழுதவர்கள் அடிப்பதும், அடித்தவர்கள் அழுவதும் அலையலையான அத்தியாயங்கள் இங்கே. அழுகைகளும், அத்தியாயங்களும் பல, மொழிகள் மட்டும் இரண்டு.

அழுக்குகள் அதிகமானால், அழுகைகள் அடங்கமறுத்தால் என் கரம் களைந்து வேள்வி நடத்துவார்கள். வெப்பத்தில் என் கூந்தல் கருகிப்போகும், காயங்கள் அனலாக கொதிக்கும், காட்டெருமைகள் குளிர் காயும், எரிய மறுத்த மண்டை ஓடுகளும், தீயின் தீர்வாக சாம்பலும் காலையின் காட்சிகளாகும்.

புளித்து புழுத்துப்போன மனதோடு, மனசாட்சியிருந்தும் சாட்சி சொல்ல முடியா வாயில்லா ஜீவனாய் வாழப்பிடிக்காமல், மரணத்தை மகிழ்ச்சியோடு கைப்பிடிக்கவிருந்த அந்தக்கணம்; இரண்டு ஒலிபெருக்கிகள் என் தோள்மேல். கடைசி வார்த்தை கேட்கும் ஆசையில் மரணத்தை ஒத்திப்போட்டேன். போர்கள் போதிய காலத்திற்கு போர்த்தி வைக்கப்பட்டுள்ளதாக போதிக்கப்பட்டது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் குளிர்ந்து போனது. உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்ததில் நாலைந்து மயிர்கள் உதிர்ந்து போனது. என் தவிப்புக்கு கிடைத்த தவப்பரிசாக இறைவனுக்கு நன்றி சொன்னேன். நாய்களும், நாடகங்களும் அற்று, நல்ல காற்றுக்காக நாசி தாவும் நேரம்;

மீண்டும் மனிதர்கள் மிருகத்தனமாக ஒருவனை தாக்கிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் இது சற்று வித்தியாசம். அடித்தவர்களும் அழுதவர்களும் அந்நியர்களும் அல்லர். அதட்டல்களும் அலறல்களும் ஒரே மொழியில்...

பகுத்தறிவற்ற எனக்கே ஒன்று மட்டும் புரிந்தது. மனிதர்கள் அடிப்பதிலே குறியாக இருப்பார்கள், அடிவாங்க ஆட்கள் இல்லையெனில் தம்மைத்தாமேனும் அடித்திக் கொள்வார்கள். மாய்வதற்கு முன்பே சாய்த்துக் கொண்டிருகிறார்கள் மற்றுமொரு போருக்காக என்னை, ஓய்வதற்கு முன் ஓரளவுக்கு பிதற்றிய மகிழ்ச்சியில் நான்..

வியாழன், 23 டிசம்பர், 2010

அவள் விபச்சாரி...


அடிக்கடி
ஆந்தைக்கண்கள் - அங்கே
அலை மோதும்.
ஆளரவமற்ற - ஆனால்
அடையாளம் தெரியா,
ஆட்கள் ஆர்ப்பரிக்கும்
அனலின் அரங்கம்.

அது
இரத்தவண்ண பிரதேசம்.

இது
இதிகாசத்தில் இல்லாத
இலக்கணப்பெயர் - ஆனால்
இலக்கியம் சொல்லும்
இருள் பிரதேசம்.

முற்றத்தின் முருங்கைகளாய்
முத்திரை பதித்த மூத்தவர் சிலர் - இதன்
முகவரி கேட்டே
மூக்குச்சிந்தி
முகம் சுளிப்பர்.

விபச்சாரம்
அபச்சாரம் என்பர்.

குப்பைகளில்
குமட்டும் வாசனையில்
குற்றுயிராய்த்துடிக்கும்
புழுக்களாய்
காறி உமிழ்வர்.

குதர்க்கம் பேசி - அவள்
குடும்பத்துக்கு
நடுத்தெருவில்
மடு அமைப்பர்.

சமரசம் பேசின்
மூன்றறிவுள்ள முதலையாய் - எமை
முட்டி மோதுவர்.


அவள்
விபச்சாரி.
வடிகால்கள் அமைத்தே
வடிநிலமாய் போனவள்.
காமத்தின் கரங்களுக்கு
கட்டுப்போட்டவள்,
ஆசைகளின் முறுக்குகளை
தளர்த்தி விட்டவள்,
அறியாதவைகள் அனைத்தும்
அற்பமென உணரச்செய்தவள்.

உங்கள்
சகோதரிகளின் கற்பை
காமுகர்களின் கரங்களிலிருந்து
காப்பாற்றியவள்.
தூக்குக்கயிறுகளுக்கும்
தேக்குமர ஆவிகளுக்கும்
விடை கொடுத்தவள்.

கழுத்தின் கயிற்றுக்காய்
கூண்டுகளில்
மண்டியிட்டுக்கிடப்பவர்கள் - ஒருபோதும்
கண்ணீர் விட்டதில்லை;
கற்பழித்தவர்களைத் தவிர.

காமத்தின் உச்சத்தில்
காரணம் தெரியாது
காரியம் செய்தவன்
அவன்.

அவன் ஓமோன்கள் ஒழிந்தோட
ஓடைகள் அங்கில்லை.
குளமுடைத்து
குடிமனை மூழ்கவே செய்யும்.
வாய்க்கால்கள்
வரையப்படும் வரை
வயல்களின் களைகளுக்கோ,
வரம்புகளின் வழுக்கல்களுக்கோ
விமோசனம் இல்லை.

உங்கள்
அத்துமீறல்களாலும்
அரக்க குணங்களாலும்;
உங்களாலே படைக்கப்பட்ட
அவளை;
இனியாவது
இன்பமாய் வாழவிடுங்கள்.

உங்கள்
இடிப்புகளுக்கும் - அவள்
துடிப்புகளுக்கும் - மன
வெடிப்புகளுக்கும்
விடுதலை கொடுங்கள்.

அவளை
அங்கீகரியுங்கள்.

இல்லையேல் .....

விபச்சாரம் இல்லாத
விந்தை உலகம்
அபத்தமாய் இருக்கும்.
அது அப்பாவி பெண்களை
அடிக்கடி அழவைத்து
வேடிக்கை பார்க்கும்.

சனி, 11 டிசம்பர், 2010

ஒரு பெண்ணின் ஏக்கம்


என் கண்கள்
கனவுகளுக்கு களவு போகும்
நேரங்களில் கூட - உன்
உணர்வுகளை
உதிர்த்திக்கொண்டவன்
நீ.

அர்த்த ராத்திரியின்
நிர்வாண உடலில் - என்
பழைய அழகின்
அடிவாரத்தையும் - காணாது
தோற்றுப்போகிறாய்.

வரிகொண்ட வயிறும்
பெருத்த உடலும்
உன்னை - அடிக்கடி
சலிப்பூட்டுவதாய் சஞ்சலப்படுகிறாய்.

ஊரெங்கும் உள்ள
உன் - குழந்தைகளை
உறுதிப்படுத்த
உண்மைத்தடம் இல்லையென்று - நீ
பெருமை கொள்ளலாம்.

பாவங்களில்
பாதியும்
பங்குகொள்ளாது
பார்வையாளனாயிருக்கும் - உன்
நாடகம் நன்றாயிருக்கிறது.

அடிக்கடி
அலங்காரங்களை
அகற்றிக்கொள்ள
ஆண்டவன் - உனக்குத்தான்
அவகாசம் கொடுத்திருக்கிறான்.

என்றுமே மாறாத
கர்ப்பத்தின்
கடந்த இரவுகளுக்காக
கருணையற்ற
கடவுளை
கடிந்து கொள்கிறேன்.

உன்
உணர்வுகளின் அவசரத்துக்காகவே
உதிராத்தடயங்களை
உதரத்தில்
உரித்தாக்கிக்கொண்டவள்
நான்.

கற்பையும், களங்கத்தையும்
கட்டுரைகளில் மட்டுமே
கண்டவன்
நீ.

உன்
தேவைகளின்
தேடல்களின் முடிவில் - என்
விம்மல்களுக்கும், அழுகைகளுக்கும்
விடையளிக்காது போனவன்
நீ.

ஒவ்வொரு விடியலும் - உன்
ஆசைகளின் அஸ்த்தமனத்திலும்
ஒவ்வொரு அஸ்த்தமனமும் - என்
வியர்வையின் விடியலிலும்
தொடங்குகிறது.


நீயோ
பலநூறு குறுந்தொடர்களில்
நடிகனாய் உள்ள போது,
நானோ - அதே
தொடர் நாடகத்தில் - என்
பிள்ளைகளின் பிற்காலத்துக்காய்....

(கவிதை மீண்டும் முதலில் இருந்து)

தெருவிளக்குகள்


தலை குனிந்து நின்ற போதும்
தலைக்கனம் என்று கூறி,
தூவப்பட்ட கற்களால்
தூள் தூளாயிருக்கும் - நம்
வீதியோர விளக்குகள்
விடிந்து பார்க்கையிலே.

உண்மை எதுவெனில் - அவை
சாமத்து சம்பவங்களுக்கு
சாட்சியங்களாய் இருந்தவை.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கரிக்கோடுகள்



# கை தொட முடியா உச்சி மரமும், கால் மிதிக்கும் நெடுந்தடியாய் - ஆற்றின் குறுக்கே.


# முகில்கள் முட்டி மலைகள் அழுகிறது - மனசு.


# மலைகளின் மடுக்களில் மண்குடிசைகள் - நம்பிக்கை என்பது சரியாது.


# குடிசை வீட்டு குப்பி விளக்கு கும்மிருட்டிலும் - நாளைய வெளிச்சத்துக்காய்..


# ஆடாத தலைகளையே ஆடவைக்கும், தானாடாது - புகைவண்டி.


# காவி நிறத்தில் கண்ணாடிக்குடுவை ; உள்ளே இருப்பது தேநீரா, தெளி நீரா? - தெருவோரக்குழந்தை.


# நவக்கிரகங்களுக்கு நாலு சுவர் இல்லாதது நானும் நீயும் எதிர் எதிரே ....


# நீல வானம், வெண் மேகம், கரு காகம் - எதுவும் தனித்து அழகில்லை.


# அருவியின் அழகு தினமொரு வண்ணம்; யாருக்கு தெரியும் அத்தனையும் அழுக்கு என்று.


# புலியும் சிங்கமும் எலியின் வாலில் - பட்டம்.


# இணையாமல் சுழல்கிற இரு சக்கரங்கள் - பணம் , குணம். அசையாமல் தவிக்குது வண்டி - பூமி.


# தலைவர்கள் வருகை குப்பை தொட்டிகளுக்கு - சுவர் ஒட்டிகளில்.


# இலைகளே அற்ற கிளைகளில் பூக்கள் - கொக்குகள்.