சனி, 11 டிசம்பர், 2010

ஒரு பெண்ணின் ஏக்கம்


என் கண்கள்
கனவுகளுக்கு களவு போகும்
நேரங்களில் கூட - உன்
உணர்வுகளை
உதிர்த்திக்கொண்டவன்
நீ.

அர்த்த ராத்திரியின்
நிர்வாண உடலில் - என்
பழைய அழகின்
அடிவாரத்தையும் - காணாது
தோற்றுப்போகிறாய்.

வரிகொண்ட வயிறும்
பெருத்த உடலும்
உன்னை - அடிக்கடி
சலிப்பூட்டுவதாய் சஞ்சலப்படுகிறாய்.

ஊரெங்கும் உள்ள
உன் - குழந்தைகளை
உறுதிப்படுத்த
உண்மைத்தடம் இல்லையென்று - நீ
பெருமை கொள்ளலாம்.

பாவங்களில்
பாதியும்
பங்குகொள்ளாது
பார்வையாளனாயிருக்கும் - உன்
நாடகம் நன்றாயிருக்கிறது.

அடிக்கடி
அலங்காரங்களை
அகற்றிக்கொள்ள
ஆண்டவன் - உனக்குத்தான்
அவகாசம் கொடுத்திருக்கிறான்.

என்றுமே மாறாத
கர்ப்பத்தின்
கடந்த இரவுகளுக்காக
கருணையற்ற
கடவுளை
கடிந்து கொள்கிறேன்.

உன்
உணர்வுகளின் அவசரத்துக்காகவே
உதிராத்தடயங்களை
உதரத்தில்
உரித்தாக்கிக்கொண்டவள்
நான்.

கற்பையும், களங்கத்தையும்
கட்டுரைகளில் மட்டுமே
கண்டவன்
நீ.

உன்
தேவைகளின்
தேடல்களின் முடிவில் - என்
விம்மல்களுக்கும், அழுகைகளுக்கும்
விடையளிக்காது போனவன்
நீ.

ஒவ்வொரு விடியலும் - உன்
ஆசைகளின் அஸ்த்தமனத்திலும்
ஒவ்வொரு அஸ்த்தமனமும் - என்
வியர்வையின் விடியலிலும்
தொடங்குகிறது.


நீயோ
பலநூறு குறுந்தொடர்களில்
நடிகனாய் உள்ள போது,
நானோ - அதே
தொடர் நாடகத்தில் - என்
பிள்ளைகளின் பிற்காலத்துக்காய்....

(கவிதை மீண்டும் முதலில் இருந்து)

4 கருத்துகள்:

  1. ஒரு பெண்ணின் ஏக்கத்தை இவளவு அழகாக சொன்னது நன்றாக உள்ளது . துபா உங்களின் கவிதைப் பயணம் மென்மேலும் ரயில் சிநேகங்கள் போல தொடரவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் .

    பதிலளிநீக்கு