வியாழன், 23 டிசம்பர், 2010

அவள் விபச்சாரி...


அடிக்கடி
ஆந்தைக்கண்கள் - அங்கே
அலை மோதும்.
ஆளரவமற்ற - ஆனால்
அடையாளம் தெரியா,
ஆட்கள் ஆர்ப்பரிக்கும்
அனலின் அரங்கம்.

அது
இரத்தவண்ண பிரதேசம்.

இது
இதிகாசத்தில் இல்லாத
இலக்கணப்பெயர் - ஆனால்
இலக்கியம் சொல்லும்
இருள் பிரதேசம்.

முற்றத்தின் முருங்கைகளாய்
முத்திரை பதித்த மூத்தவர் சிலர் - இதன்
முகவரி கேட்டே
மூக்குச்சிந்தி
முகம் சுளிப்பர்.

விபச்சாரம்
அபச்சாரம் என்பர்.

குப்பைகளில்
குமட்டும் வாசனையில்
குற்றுயிராய்த்துடிக்கும்
புழுக்களாய்
காறி உமிழ்வர்.

குதர்க்கம் பேசி - அவள்
குடும்பத்துக்கு
நடுத்தெருவில்
மடு அமைப்பர்.

சமரசம் பேசின்
மூன்றறிவுள்ள முதலையாய் - எமை
முட்டி மோதுவர்.


அவள்
விபச்சாரி.
வடிகால்கள் அமைத்தே
வடிநிலமாய் போனவள்.
காமத்தின் கரங்களுக்கு
கட்டுப்போட்டவள்,
ஆசைகளின் முறுக்குகளை
தளர்த்தி விட்டவள்,
அறியாதவைகள் அனைத்தும்
அற்பமென உணரச்செய்தவள்.

உங்கள்
சகோதரிகளின் கற்பை
காமுகர்களின் கரங்களிலிருந்து
காப்பாற்றியவள்.
தூக்குக்கயிறுகளுக்கும்
தேக்குமர ஆவிகளுக்கும்
விடை கொடுத்தவள்.

கழுத்தின் கயிற்றுக்காய்
கூண்டுகளில்
மண்டியிட்டுக்கிடப்பவர்கள் - ஒருபோதும்
கண்ணீர் விட்டதில்லை;
கற்பழித்தவர்களைத் தவிர.

காமத்தின் உச்சத்தில்
காரணம் தெரியாது
காரியம் செய்தவன்
அவன்.

அவன் ஓமோன்கள் ஒழிந்தோட
ஓடைகள் அங்கில்லை.
குளமுடைத்து
குடிமனை மூழ்கவே செய்யும்.
வாய்க்கால்கள்
வரையப்படும் வரை
வயல்களின் களைகளுக்கோ,
வரம்புகளின் வழுக்கல்களுக்கோ
விமோசனம் இல்லை.

உங்கள்
அத்துமீறல்களாலும்
அரக்க குணங்களாலும்;
உங்களாலே படைக்கப்பட்ட
அவளை;
இனியாவது
இன்பமாய் வாழவிடுங்கள்.

உங்கள்
இடிப்புகளுக்கும் - அவள்
துடிப்புகளுக்கும் - மன
வெடிப்புகளுக்கும்
விடுதலை கொடுங்கள்.

அவளை
அங்கீகரியுங்கள்.

இல்லையேல் .....

விபச்சாரம் இல்லாத
விந்தை உலகம்
அபத்தமாய் இருக்கும்.
அது அப்பாவி பெண்களை
அடிக்கடி அழவைத்து
வேடிக்கை பார்க்கும்.

3 கருத்துகள்:

  1. its very ,,,,nice....but ,,,,என்ன தான் சொல்றீங்க ...விபச்சாரத்தை வரவேற்க வேண்டுமா ?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11 மே, 2011 அன்று 4:55 AM

    உங்களால் ஒரு பெண்ணின் ஏக்கத்தை பிரதிபலிக்க முடிந்ததா?என்பதே எனது சந்தேகம்.

    பதிலளிநீக்கு
  3. பெண்மையின் மனஎண்ணங்களை பிரதிபலிக்கும் ஆண்கள் வரப்பிரசாதமே நண்பனே! வாழ்க..

    ஜனனி.

    பதிலளிநீக்கு